முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • பாசிப்பருப்பு
  • முருங்கைக்காய்
  • கத்தரிக்காய்
  • அரசாணிக்காய்
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • வெந்தயம்
  • கடலைப்பருப்பு
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • புளி
  • தேங்காய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து (அடுப்பை மெதுவாக வைக்கவும்) 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

ஒரு குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பு, 1/4 கப் பாசிப்பருப்பு, நான்கு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

பின்னர், ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், இரண்டு தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பின் இரண்டு முருங்கைக்காய், இரண்டு கத்தரிக்காய், பொடியாக நறுக்கிய அரசாணிக்காய் 1/2 கப், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

இதனுடன் 1/2 கப் புளிக்கரைசல் சேர்க்க வேண்டும். புளி கரைசல் கொதித்த உடன் வேக வைத்துள்ள பருப்பை தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக விடவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post